April 14, 2010

கலைஞர் புத்தாண்டு?!!!



தை முதல்நாள். நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்துச்சொல்ல தொலைபேசியில் அழைத்தார்.

"பொங்கல் வாழ்த்துக்கள்"

"நன்றி. உங்களுக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

"ம்ஹூகும்.... எங்களுக்கு பொங்கல் மட்டும்தான். புத்தாண்டு இல்லை"

"என்னாச்சு? தை முதல்நாள்-னு அரசு அறிவிச்சு இது இரண்டாவது வருசமாச்சே!"

"எங்களுக்கு இது புத்தாண்டு இல்லை. கலைஞர் சொன்னா நாங்க ஏத்துக்கணுமா என்ன?"

"தை முதல்நாளை புத்தாண்டுன்னு நீங்க ஏத்துக்கலையா... இல்ல கலைஞர் அறிவிச்சதனால ஏத்துக்கலையா?"

"கலைஞர்தானே தன்னிச்சையா அறிவிச்சார்.........."

"அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடி முடிவுசெய்த விசயமாச்சே! கலைஞர் அம்முடிவை வெறும் அரசு அறிவிப்பாகத் தானே செய்தார்?"

".............................."

"நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் இருக்கா இல்லையா? இருந்தா ஏத்துக்கறதுல என்ன சிரமம்?"

".............................."

"அப்புறம்....... கலைஞர் அரசு இதை அறிவிக்காம வேறு யார் வந்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?"

"ம்....................சரி. அத அப்புறம் பாத்துக்கலாம். பொங்கல் நல்லா போய்க்கிட்டிருக்குல்ல"

அழைப்பைத் துண்டித்தார். ஏண்டா அழைத்தோம் என நொந்துபோயிருக்கலாம்.

சர்வதாரி, பிரசோத்பத்தி, விக்ருதி போன்ற எல்லாமே தமிழர்கள் ஆண்டுகள்தான்..... பாரம்பரியமாக தமிழர்களின் புத்தாண்டு சித்திரை.... சூரியன் சித்திரையில் தான் அந்த ரேகையிலிருந்து இந்த ரேகைக்கு வருகிறார்.... இவையெல்லாம்கூடப் புரியுது.

ஒன்னு மட்டும் புரியல. அரைநூற்றாண்டுக்கு முன்பாக தமிழறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்தை, கலைஞர் தன்னிச்சையாக அறிவிப்பு செய்தார் என்பதாகப் பெரிதுபடுத்துவது சரியா?.

குறிப்பு- இவ்விடுகை ஒரு மறு வெளியீடு.