February 3, 2010

குடியரசுநாள் தொலைக்காட்சி உலா



குடியரசுதின விடுமுறை. வழக்கம்போல் தொலைக்காட்சியில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நேரம் கரைந்தது. அவர்களும் வழக்கம்போல திரைப்பட நடிக நடிகைகள் நாட்டுக்காற்றும் அரும்பணியை பேட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். விஜய், மக்கள் இவையிரண்டும் எனக்கு விருப்பமானவை. விஜயில் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பிய சிறப்பு நிகழ்ச்சிகளையே மறுபடி அரைத்துக்கொண்டிக்க, மக்கள் தொலைக்காட்சிப் பக்கம் வந்தேன். "உங்களுக்குத் தெரியுமா?" என்றொரு சிறப்பு நிகழ்ச்சி. அனைத்து தரப்பையும் சார்ந்த பொதுமக்களிடம் நம் குடியரசு தொடர்பான சிலகேள்விகள் கேட்டு மக்களின் அறிவைச்(!) சோதித்து, சரியான பதில் சொல்பவர்ளுக்கு பரிசும் கொடுத்தார்கள். குடும்பத்தினர், தொழிளாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், என இப்படி அனைவரிடமும் எளிய கேள்விகள்....

இந்திய நாட்டின் விடுதலைநாளுக்கும் (சுதந்திரதினம் தமிழ்ச்சொல் இல்லை என்பது உறைத்தது) குடியரசுநாளுக்கும் என்ன வேறுபாடு? -இது ஏழெட்டுப்பேர் கொண்ட ஓர் உயர்நடுத்தர குடும்பத்தினரிடம் கேட்கப்பட்ட கேள்வி. தெரியவில்லை என ஓரிருவர் சொல்ல, மற்ற இருவர் சொன்ன பதில்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தது. "முன்பு இருந்துவந்த அன்னியர்களின் கொடியைப் புறக்கணித்துவிட்டு நம் நாட்டுகென்று ஒரு கொடியை நாம் ஏற்றுக்கொண்ட நாள்" என மிகத் தெளிவாக விளக்கினார்கள். குடியரசுநாளைக் கொடியரசுநாளாகப் புரிந்துகொண்டார்கள் போலும்.

தற்போதைய குடியரசுத்தலைவரின் பெயர் என்ன? -இது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பத்து பனிரண்டு பள்ளிச் சிறுவர்கள் கொண்ட குழுவினரிடம் கேட்கப்பட்ட கேள்வி. பலர் தெரியாது என்றனர். பரவலாக காந்திஜி, காந்தி, காந்தியடிகள், நேரு என்ற பதில்கள் வந்தன. காந்தியளவுக்கு வேறுயாருக்கும் நாட்டோடு தொடர்பு இல்லை அவர்களவில் (இது பரவாயில்லை. ஆறாம்வகுப்பு படிக்கையில் எங்கள் பள்ளி இன்ஸ்பெக்சனுக்கு வந்த அதிகாரி 'தமிழகத்தின் முதலமைச்சர் யார்' எனக்கேட்க 'ஹெட்மாஸ்டர்' என ஒரு மாணவனிடமிருந்து பதில் வந்தது. அப்போது எங்களுக்கு உலகமே ஹெட்மாஸ்டர்தான்!). ஒரு சிறுவன் "தெரியும். ஆனால் அப்பெயரை வாயில் சொல்ல வரவில்லை" என்றான் அப்பாவியாக. சற்று வயதில் பெரிய ஒருவன் மட்டும் பிரதிபா பாட்டீல் எனச் சரியாகச் சொன்னான். அதன்பின், முதலில் அப்பெயர் சொல்லவராத மாணவன் சற்று முயற்சிக்குப்பின் சொல்ல, என் காதில் விழுந்தது 'பிரதிபா பாட்டி'.

மதியம் விஜய்-பக்கம் போனால் காந்தி திரைப்படம் தமிழில் போய்க்கொண்டிருந்தது. வெள்ளைநிறத்தில் இருந்த காந்தியை (Ben Kingsley) "கருப்பர்களுக்கு முதல்வகுப்பில் இடமில்லை" எனக் கூறி ரயிலில் இருந்து கீழே தள்ளிக்கொண்டிருந்தார்கள். மாணவப்பருவத்தில் ஆங்கிலத்தில் புரிந்தும் புரியாமலும் பார்த்தது. குடியரசு நாளில் பார்க்க சரியான படம். தமிழ் காந்தியோடு அன்றைய பொழுது கடந்தது.

.

2 comments:

அண்ணாமலையான் said...

முதலமைச்சர் ஹெட்மாஸ்டரா? நல்ல ஜோக்கு போங்க..

பெரியன் said...

@அண்ணாமலையான், வருகைக்கு நன்றி!

Post a Comment