January 30, 2011

ஆடுகளம் திரைப்படம் – அனுபவக் குறிப்புகள்

.
**ஒரு நல்ல மனிதனுக்குள் ஈகோ என்னும் விசயம் புகுந்துவிட்டால் எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து போகிறான் என்ற ஒரு சின்ன நாட் தான் கதை. அதை பாரம்பரிய சேவல் சண்டையின் பின்னணியில் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

**சேவல்சண்டையில், தொடர்ந்து வெற்றிபெற்று வரும் பேட்டைக்காரன் குழுவும், ஒருமுறையாவது வெற்றி பெற்றாகவேண்டுமென வெறிகொண்டு எதையும் செய்யும் ரத்தினசாமி குழுவும் முட்டிக்கொள்கிறது. இதற்கிடையில், பேட்டைக்காரனுக்கள் புகும் ஈகோ தன் குழுக்குள்ளேயே முட்டலை ஏற்படுத்தி விடுவதால், எதிர்குழு குரூர மகிழ்ச்சியுடன் இடைவேளையோடு மொத்தமாக ‘ஜீட்’ விடுகிறது. பேட்டைக்காரன் குழு சேவல்களும் மனிதர்களும் சிதைய, சிதற படம் முடிகிறது.

**பேட்டைக்காரனாக வரும் கவிஞர் ஜெயபாலன் தான் கதைமுழுதும் வியாபித்திருக்கிறார். நம் மனத்திலும். தன் குருவுக்குள் ஈகோவைக் கிளறும் சிஷ்யன் ‘கருப்பாக’ தனுசும் படத்தோடு ஒன்றியிருக்கிறார்.

**படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

**சேவல் வளர்ப்பில், சண்டையில் உள்ள நுட்பமான பல விசயங்களை படம் நமக்கு சொல்கிறது.

**சேவல்சண்டையில் சேவல்கள் அதிகம் மடிவதில்லை. மனிதச்சண்டையிலேயே.

**படம் ஆரம்பிக்கும்போது அரங்கில் இருக்கும் இருட்டு படம் முடியும் வரை தொடர்கிறது. படம் முழுதும் கிட்டத்தட்ட இரவுக்காட்சிகள்தான். பளிச்சுனு சில காட்சிகள் வராதா என கண்கள் தவிக்கின்றன; ஒரே லாபம் - வன்முறை, ரத்தக்காட்சிகளின் பாதிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

**பேட்டைக்காரனின் துரோகத்தை கருப்புக்கு ‘காட்சிகள்’ வழியாக இயக்குனர் தெரியப்படுத்தி இருக்கலாம். நாயகி மற்றும் கிஷோர் வசனங்கள் வாயிலாக வலியத் தெரிவிப்பது சற்று நெருடல்.

**கதாநாயக முக்கியத்துவம், காதல் காட்சிகள், பாடல்கள் போன்ற வழக்கமான வணிகத் திணிப்புகள். முரணாக, கருப்புவின் தாய் மரணம் அடையும் அந்தக் காட்சியும் கதையின் நகர்வுக்கான கோணத்தில் செதுக்கப்பட்ட விதம்.

**இப்படம் ஒரு மாறுபட்ட, நல்ல அனுபவத்தைத் தருகிறது. வெற்றிமாறனுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்!

.

No comments:

Post a Comment